சம்பிரதாயத்தை தகர்த்த நீதிபதி சந்துரு!

பிப்ரவரி 19, 2013

justice-chandru.jpgகிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறையை தகர்த்து, தனக்கு பிரிவுபசார நிகழ்ச்சி எதுவும் நடத்த வேண்டாம் என கூறியிருக்கிறார் சென்னை ஐகோர்ட் நீதிபதி கே. சந்துரு.

 

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி பதவியேற்றவர் சந்துரு. புதிய நீதிபதியாக பதவியேற்ற கையோடு, தலைமை நீதிபதி கோகலேவைச் சந்தித்த அவர் தன்னிடமிருந்த ஒரு கவரை அவரிடம் கொடுத்துள்ளார். அதில் நீதிபதி சந்துருவின் ஒட்டுமொத்த சொத்துப்பட்டியலும் இருந்தது கண்டு அசந்து போனார் கோகலே. தொடர்ந்து சந்துரு நீதிபதியாக இருந்த காலத்தில் அவர் பிறப்பித்த உத்தரவுகள் மற்றவர்கள் ஒரு முன்னுதாரணமாக எடுத்துச் செயல்படவேண்டியவை.

 

ஒவ்வொரு புத்தாண்டின் போதும், நீதிபதிகளைப் பார்க்க பூங்கொத்துகளுடன் ஒரு பெரும் கூட்டம் செல்வது வழக்கமான நடைமுறையாக கருதப்பட்டு வருகிறது. அவ்வாறு வந்து தன்னைப் பார்க்க வேண்டாம் என தடை போட்டார் சந்துரு. மேலும், வழக்கு விசாரணையின் போது, நீதிபதியின் பின்னால் டவாலி என்றழைக்கப்படும் உதவியாளர் தனக்கு தேவையில்லை என மறுத்தார். மேலும், ஐகோர்ட் நீதிபதி அறையிலிருந்து நீதிமன்ற அறைக்கு செல்லும் போது, நீண்ட கைத்தடியை ஏந்திக்கொண்டு உதவியாளர் ஒருவர் முன்னே நடந்து செல்வார். அதற்கும் அவர் தடை விதித்துவிட்டார். ஒவ்வொரு நீதிபதிக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் 4 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பை மறுத்து, வெறும் 1 போலீஸ்காரர் மட்டும் போதும் என கேட்டுப்பெற்றவர் சந்துரு.

 

 

இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 8-ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார் நீதிபதி சந்துரு. ஒவ்வொரு நீதிபதியும் ஓய்வுபெறும் காலத்தில் அவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமான நடைமுறை. அதில் அட்வகேட் ஜெனரல், சம்பந்தப்பட்ட நீதிபதியை பாராட்டி பேசுவார். ஓய்வுபெறும் நீதிபதியும் அதற்கு நன்றி தெரிவத்து பேசுவார். தொடர்ந்து ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் டீ பார்ட்டி நடக்கும். மேலும், போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியும், ஓய்வு பெறும் நீதிபதிக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும்.

 

தற்போது அந்த நடைமுறைப்படி தனக்கு பிரிவுபச்சார நிகழ்ச்சி ஏதும் நடத்த வேண்டாம் என தலைமை நீதிபதிக்கு சந்துரு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதிகளுக்கான பிரிவுபசார நிகழ்ச்சி என்ற சம்பிரதாய நடவடிக்கை முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ள அவர், வரும் மார்ச் 8-ம் தேதி, கோர்ட்டின் மற்ற நாட்கள் போலவே இருந்தால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறையை தகர்த்துள்ளார் நீதிபதி சந்துரு. கடந்த 1929-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த ஜாக்சன் என்பவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த போது, நான் எனது பணியைச் செய்தேன். எனக்கெதற்கு பிரிவுபச்சார நிகழ்ச்சி என மறுத்தார் ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் முன்னுதாரணமாக திகழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நீதிபதி சந்துரு.

 

நன்றி: தினமலர்

வாசகர் கருத்துக்கள்
பெயர்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
raajan
He is a real hero among advocates.
iniyan
manithargalum ingu vaazhgirargal enbathu therigirathu. innum kongam kaalam irunthuirukkalam
Loganathan
Justice K.Chandru date of appointment is 31/07/2006. Please correct it.
Ebony raje
Heart shaft wishes....